top of page

உள்ளே வெளியே
அடைக்கப்பட்ட சாளரம்
வெளியே காற்று
பலமாக மோதுகிறது.
குளிரும், வெயிலும்
தூசியும், நினைவுகளும்
உள்ளே வரப் போராடுகிறது.
அடைபட்ட கதவுகளை
திறக்கக் கைகள் இல்லை.
உள்ளேயும் தூசியும்
சிலந்தியும், இருட்டும்
நினைவுகளும்
நிரம்பி இருக்கிறது.
-லி
இரவென்னும் பிசாசு
இரவென்னும் பிசாசு
ஏன் என்னை
சித்திரவதை செய்கிறது?
என் வெளிச்சத்தை
குடித்து என்னை
குருடனாக்குகிறது.
இரவு தினமும்
புதிய இருட்டின்
முகமூடி அணிகிறது.
நேற்றின் இருட்டு
இன்றின் இருட்டும்
வித்தியாசப்படுகிறது.
ஒரு தீக்குச்சித் தீயின்
கால அளவு போதும்
நான் தப்பித்துக்கொள்ள,
அது எரிந்துவிடாதபடி
இரவு புயலாடிக்கொண்டு
பிசாசாகி விடுகிறது.
-லி
தேநீர் நஞ்சு
ஒரு கோப்பை
தேநீரை மதுவென
தினமும் குடிக்கிறேன்.
அவளுக்கு மது
பிடிக்காது
விலக்கச் சொன்னாள்.
அவள் முகம்
தேநீரில் நஞ்சாக
நுரை கொள்கிறது
-லி

bottom of page